உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 29, 2013

எம்23 போராளிகள் இராணுவ ரீதியில் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என கொங்கோ மக்களாட்சிக் குடியரசுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் மார்ட்டின் கோப்லர் அறிவித்துள்ளார்.


போராளிகள் நாட்டின் கிழக்கேயுள்ள தமது தளங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தற்போது ருவாண்டா எல்லையில் உள்ள சிறிய முக்கோண வடிவ நிலப்பகுதியிலேயே தளம் அமைத்துள்ளார்கள் என ஐநா தூதர் தெரிவித்தார். ருவாண்டாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேகு மலைப்பகுதியை விட்டு போராளிகள் வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


நேற்று திங்கட்கிழமை அன்று போராளிகளின் ஐந்தாவது தளம் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் தமது படை விலகல் ஒரு தற்காலிக நடவடிக்கையே என போராளிகள் கூறுகின்றனர்.


போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தாம் நம்புவதாக பிரெஞ்சுத் தூதர் ஜெரார்டு ஆராட் கருத்துத் தெரிவித்தார். கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.


அரசுப் படைகள் நேற்று ருமாங்காபோ நகரினுள் நுழைந்ததை உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.


கடந்த ஆண்டு நவம்பரில் எம்23 போராளிகள் கோமா நகரைக் கைப்பற்றி சிறிது காலம் அந்நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனாலும், பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து ஒரு வார காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


எம்23 போராளிகளுக்குத் தாம் உதவியளிப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகளை ருவாண்டா மறுத்து வருகிறது. ருவாண்டா அரசும், எம்23 போராளிகளைப் போன்றே துட்சி இனத்தவர் ஆவர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தில் இருந்து எம்23 என்ற கிளர்ச்சிக் குழுவினர் வெளியேறி இராணுவத்தினருக்கு எதிராகப் போர் தொடுத்ததை அடுத்து, நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து 800,000 பேர் வரை இடம்பெயர்ந்தனர்.


மூலம்

[தொகு]