கொலம்பியாவின் ஃபார்க் போராளிக் குழுத் தலைவர் அல்ஃபோன்சோ கானோ கொல்லப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 200 க்கும் மேற்பட்டோர் பலி
- 17 பெப்ரவரி 2025: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: பார்க் கிளிர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை
- 17 பெப்ரவரி 2025: கொலம்பியாவின் பெரிய கிளர்ச்ச்சியாளர் குழுவான பார்க் போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டது
- 17 பெப்ரவரி 2025: கொலம்பியாவின் ஃபார்க் போராளிகளின் அரசியல் கட்சி சட்டபூர்வமாக்கப்பட்டது
ஞாயிறு, நவம்பர் 6, 2011
ஃபார்க் என அழைக்கப்படும் கொலம்பியாவின் புரட்சிகர இராணுவப் படை என்ற முக்கிய போராளிக் குழுவின் தலைவர் அல்ஃபோசோ கானோ கொல்லப்பட்டு விட்டதாக கொலம்பிய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று நாட்டின் தென்மேற்கே காவுக்கா மாகாணத்தில் சுவாரெசு நகருக்கருகே உள்ள அடர்ந்த காடுகளில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கானோ (63 வயது) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹுவான் கார்லோசு பின்சோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "கொலம்பியாவுக்கும் அதன் மக்களுக்கும் இது ஒரு முக்கிய செய்தியாகும்," என அவர் கூறினார். அல்ஃபோன்சோ கானோவின் இறந்த உடலின் புகைப்படங்களையும் அமைச்சர் காண்பித்தார். படத்தில் கானோவின் வழமையான தாடி இருக்கவில்லை என செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், தமது தலைவர் இறந்திருந்தாலும், தாம் தொடர்ந்து போராடப்போவதாக ஃபார்க் போராளிகள் அறிவித்துள்ளார். சுவீடனைத் தளமாகக் கொண்டுள்ள ஆன்கோல் இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபார்க் போரளிகளுக்கு கொலம்பியாவின் அரசுத்தலைவர் ஹுவான் மனுவேல் சாண்டோசு விடுத்துள்ள எச்சரிக்கையில், "உங்கள் ஒவ்வொருவருவருக்கும் நான் விடுக்கும் செய்தி என்னவென்றால், 'கலைந்து விடுங்கள்'... அல்லது நீங்கள் சிறையிலேயோ அல்லது கல்லறையிலேயோ அடைக்கப்படுவீர்கள். நாங்கள் அமைதியை அடைவோம்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் பல ஃபார்க் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் மோனோ ஜோஜோய் என்ற ஃபார்க் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஃபார்க் போராளிக் குழு 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக நீடித்து வரும் கொலம்பியாவின் உள்நாட்டுப் போரில் இடதுசாரி போராளிகளும், வலதுசாரி துணை இராணுவக்குழுக்களும் போரில் ஈடுபட்டு வருகின்றன.
மூலம்
[தொகு]- Colombia president hails Farc leader Cano's killing, நவம்பர் 6, 2011
- Top commander of Colombia's FARC group killed: gov't, சின்குவா, நவம்பர் 5, 2011