கொலம்பியாவில் மாநில ஆளுநர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 24, 2009


கொலம்பியாவின் மாகாண ஆளுநர் ஒருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கெக்குவெட்டா மாகாண ஆளுநரான லூயிஸ் செலுலர் என்பவர் வீட்டிலிருந்த போது போராளிகள் உள்ளே நுழைந்து காவலாளியைச் சுட்டுக் கொன்று, ஆளுநரை பணயக் கைதியாகப் பிடித்துச் சென்றனர்.


ஃபார்க் என்ற கொலம்பிய புரட்சிகர இராணுவப் படை என்ற போராளிக் குழுவே இவரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஃபார்க் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டுப் பகுமியில் ஆளுநரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


ஆளுநரின் கழுத்து வெட்டப்பட்டு இருந்ததாக கொலம்பிய அதிபர் அல்வாரோ உரிபே தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டில் உரிபே பதவியேற்ற பின்பு இடம்பெறும் மிக முக்கிய அரசியல் கொலை இதுவாகக் கருதப்படுகிறது.


இக்கடத்தல் சம்பவம் கொலம்பியாவில் கடந்த கால இருள் நிறைந்த நாட்களை ஞாபகப்படத்துவதாகச் சிலர் கூறினர். கெக்குவெட்டா மாநில உதவி ஆளுநர் இந்நிகழ்வு பற்றிக் கூறுகையில், "கடத்தப்பட்ட ஆளுநரைத் தேடி படையினர் காடுகளுக்குள் சென்றபோது அவரின் சடலத்தைப் படையினர் கண்டெடுத்தனர். சம்பவம் கசப்பானதாக இருந்தாலும் ஆளுனர் கொலை செய்யப்பட்டார் என்பதை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்கிறது," எனத் தெரிவித்தார்.


கொலம்பியாவின் காடுகளில் பெரும்பாலான பகுதி ஃபார்க் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது. இவர்களை அடக்க இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதால் குண்டுத்தாக்குதல்களும் கடத்தல் சம்பவங்களும் மிக இலகுவாக இடம்பெறுகின்றன.

மூலம்[தொகு]