உள்ளடக்கத்துக்குச் செல்

கொலம்பிய பார்க் தலைவரின் மெய்ப்பாதுகாவலர்கள் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 13, 2010

கொலம்பியாவில் இராணுவத்தினர் டொலிமா மலைப் பகுதியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் பார்க் போராளிக் குழுத் தலைவர் கொலெமோ சயென்சின் மெய்ப்பாதுகாவலர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். பெண் போராளிப் படைத் தலைவி ஒருவரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.


கொலம்பியாவின் டொலிமா மாகாணம் (சிவப்பில்)

1960களில் இருந்து போராடி வரும் பார்க் போராளிகளுக்கு இத்தாக்குதல் ஒரு பெரும் பின்னடைவு என்று கொலம்பியாவின் இராணுவப் படைத்தலைவர் தெரிவித்தார்.


போராளிகளுக்கும், படையினருக்கும் இடையே இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொலம்பிய அரசுத் தலைவர் அல்வேரோ உரிபே இராணுவத்தினரின் வெற்றிகரமான அதிரடித் தாக்குதலுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.


"மகாலி என்ற பெண் போராளித் தலைவர் உயிரிழந்ததை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். முன்னர் 70 படையினர் வரையில் கொல்லப்பட்டமைக்கு இவரே காரணகர்த்தா," என அவர் தெரிவித்தார்.


மகாலி கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படை இயக்கத் தலைவரின் நெருங்கிய நண்பியாகவும் பார்க் இயக்கத்தின் ஒரு பிரிவின் தளபதியாகவும் விளங்கினார்.


அல்போன்சோ கேனோ எனவும் அழைக்கப்படும் பார்க் தலைவர் கொலெமோ சயென்ஸ் ஞாயிறன்று தாக்குதல் நடந்த இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹுவான் மனுவேல் சாண்டோஸ் அடுத்த மாதம் பதவியேற்கும் நிலையில் இத்தாக்குதல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், வெனிசுவேலா எல்லையில் உள்ள வடகிழக்கு மாகாணமான அரோக்குவாவில் இடம்பெற்ற சண்டைகளில் 110 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பார்க் அமைப்பில் ஏறத்தாழ 8,000 போராளிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]