கொல்லம் கோயில் வெடிவிபத்து: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திணறல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 11, 2016

கொல்லம் பரவூர் புட்டிங்கல் தேவி கோயில்

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திணறி வருகிறது.

கொல்லம் பரவூர் புட்டிங்கல் தேவி கோயில் வெடிவிபத்துக்கு பின்னர்

ஏகப்பட்ட ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்களில் காயமடைந்தோர் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் பலருக்கும் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. 4 கூடுதல் அறுவை சிகிச்சை அறைகளைத் தவிர மூட்டு, எலும்பு சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அறைகளும் திறக்கப்பட்டும் சுமார் 100 காயமடைந்தோரை விரைவில் கவனிக்க முடியாமல் மருத்துவர்களும், துணை மருத்துவ ஊழியர்களும் திணறி வருகின்றனர்.

கடுமையான தீக்காயங்களுடன் ஏராளமானோர் வரும் அதே வேளையில், கோயிலில் தீயிலிருந்து தப்பிக்க மக்கள் ஓடும்போது நெரிசலில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவர்களும் அங்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். காயமடைந்தோரின் நிலை அபாயக் கட்டத்தில் உள்ளது, பலரும் கை கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரில் 50 சதவீத மக்கள் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது[தொகு]

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, அந்தக் கோயில் அதிகாரிகள் 6 பேரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக குற்றப் பிரிவு போலீசு விசாரணைக்கும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணைக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டது.

வழக்கு பதிவு[தொகு]

இதனிடையே, பரவூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பட்டாசு ஒப்பந்ததாரர்கள், அவர்களது உதவியாளர்கள் உட்பட சுமார் 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டாசு ஒப்பந்ததாரர்களின் உதவியாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரண்[தொகு]

இதனிடையே, இந்த சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த கோயில் அதிகாரிகளான பி.எஸ்.ஜெயலால் (தலைவர்), கிருஷ்ணன் குட்டி பிள்ளை (செயலாளர்), ஜே.பிரசாத், சோமசுந்தரம் பிள்ளை மற்றும் ரவீந்திரன் பிள்ளை ஆகிய 5 பேரும் திங்கள்கிழமை இரவு போலீசில் சரணடைந்தனர். 6-வது அதிகாரியான சுரேந்திரன் பிள்ளையை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த 6 பேரையும் கொல்லம் காவல் துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து, துணை கண்காணிப்பாளர் (குற்றப் பிரிவு) ராதாகிருஷ்ணன் பிள்ளை தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மூலம்[தொகு]