உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது: தமிழக முதல்வர் கோரிக்கை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 26, 2013

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இந்த ஆண்டின் இறுதியில் காமன்வெல்த் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று தான் எழுதிய கடிதமொன்றில், "காமன்வெல்த் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை இலங்கையில் நடத்தினால், அந்நாடு நிகழ்த்திய போர்க்குற்றங்கள், இனஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் இப்போது நடந்துவரும் 'மனிதஉரிமை மீறல்' செயல்களை அங்கீகரிப்பது போலாகிவிடும். எனவே, கொழும்பு நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டாம்; அதில் கலந்துகொள்ள உத்தேசித்துள்ள மற்ற தலைவர்கள் பின்வாங்க வேண்டும்" என ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.


கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா அறிவித்துள்ளதையும், பிரிட்டனின் பிரதமருக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் செய்துள்ள பரிந்துரையையும் சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, அனைத்துலக அளவில் எந்த இடத்திலும் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அக்கடிதத்தில் "ஐநா அவையில் கொண்டு வரப்பட்ட நீர்த்துப் போன தீர்மானத்தை எவ்வித திருத்தங்களும் இன்றி இந்தியா ஆதரித்தது; இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது" என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார்.


மூலம்

[தொகு]