கோடீசுவரர்களை உருவாக்க வாய்ப்புள்ள நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 4, 2011

கோடீசுவரர்களை உருவாக்கும் வாய்ப்புள்ள உலக நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான 'பாஸ்டன் கன்சல்டிங் குரூப்' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டில் அதிக பணக்காரர்கள் உருவான அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் முன்னிலை வகிக்கும் நாடுகள் பட்டியல் ஒன்று ‘குளோபல் வெல்த் ரிப்போட்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. புதிய பணக்காரர்களை உருவாக்குவதில் உலக அளவில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.


அவ்வறிக்கையின்படி உலகம் முழுவதும் சொத்து வளர்ச்சி கடந்த ஆண்டில் ரூ. 405 லட்சம் கோடி உயர்ந்து, மொத்தம் ரூ. 5,481 லட்சம் கோடியானது. 2015ம் ஆண்டு வரை இந்த வளர்ச்சி ஆண்டுக்கு 5.9 சதவீதம் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியாவில் வசதி படைத்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக ஆண்டுக்கு 18 சதவீதம் அதிகரிக்கக்கூடும். உலகின் மொத்த வசதி படைத்தவர்கள் எண்ணிக்கையில் ஆசியாவின் பங்கும் 18 சதவீதமாக உள்ளது. அது 2015ல் 25 சதவீதமாக உயரக்கூடும்.


கோடீசுவரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 12.2 சதவீதம் உயர்ந்து 1.25 கோடி பேராக ஆகியுள்ளது. அதில் அமெரிக்கர்கள் மட்டும் 52 லட்சம் பேர். அடுத்த இடங்களை ஜப்பான், சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. வசதி படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க பங்கு சந்தை வர்த்தகம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு ஆகியவை முக்கிய காரணமாக உள்ளன இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]