சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, திசம்பர் 23, 2012

துடுப்பாட்டத்தில் சாதனை படைத்த இந்தியத் துடுப்பாட்டாளர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.


சச்சின் டெண்டுல்கர்

39 அகவையுடைய டெண்டுல்கர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், "உலகக்கோப்பையை வென்றடுத்த இந்திய அணியின் ஒரு பங்காளனாக இருந்ததில் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கூறியுள்ளார்.


டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலாக 1989 ஆம் ஆண்டில் விளையாடினார். இது வரை ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 18,426 ஓட்டங்களைக் குவித்துள்ள சச்சின், அதிக ஒரு நாள் போட்டி, அதிக ஓட்டங்கள், அதிக சதம், அதிக இரட்டை சதம் என அடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார். 49 சதங்களை அடித்துள்ளார்.


இவரது கடைசி ஒரு நாள் போட்டி ஆசியக் கோப்பைக்காக 2012 மார்ச் 18 இல் விளையாடினார். பாக்கித்தானுக்கு எதிரான இப்போட்டியில் 52 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய அணி ஆறு இலக்குகளில் வெற்றி பெற்றது.


அண்மையில் நடந்த போட்டிகளில் டெண்டுல்கர் அதிக ஓட்டங்களை எடுக்கவில்லை. 2012 ஆம் ஆண்டில் இவரது சராசரி 31.5 ஆகக்க் குறைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு இவருக்கு கவுரவ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியது.


இந்தியா - பாக்கித்தான் போட்டித் தொடர் மீண்டும் நடக்கவுள்ள நிலையில் சச்சின் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg