சட்டவிரோத டைனசோர் முட்டை விற்பனையைத் தடை செய்ய இந்தியா திட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 4, 2013

பல மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனசோர் முட்டைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


குஜராத்தின் இந்திரோடா புதைபடிவப் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனசோர் முட்டைகள்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டத்தில் உள்ள பாத்லியா என்ற இடத்தில் அமைந்துள்ள டைனசோர் கூடுகளில் உள்ளூர் நபர்கள் டைனசோர் முட்டைகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் முகமாக மாநில சட்டமன்றத்தில் "தொல்லுயிர் புதைபடிவங்கள் பாதுகாப்புச் சட்டம்" கொண்டுவரப்படவுள்ளது.


பாத்லியாவில் ஏறத்தாழ 89 எக்டையர் பரப்பளவு நிலப்பகுதி 2007 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பற்ற பிரதேசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கு டைனசோர் முட்டைகளை சட்டவிரோதமாக வேட்டையாடுவோர் தொகை அதிகரித்துள்ளது.


145 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்த இவ்வகை முட்டைகள் ஒவ்வொன்றும் 500 ரூபாயிற்கும் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் இவற்றின் பெறுமதி $190,000 ஆகும்.


"இதுவரையில் எத்தனை முட்டைகள் இங்கிருந்து அகற்றப்பட்டது என்பதற்கு சரியான கணக்கு இல்லை… ஆனாலும், புதிய சட்டமூலம் இவற்றை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் சட்டவிரோதமாக்குகிறது," என மத்தியப் பிரதேச மாநில காட்டுவளத்துறை அமைச்சர் சர்தாஜ் சிங் தெரிவித்தார்.


மூலம்[தொகு]