சமூக ஆர்வலர் சந்தீப் பாண்டே இந்திய அரசின் விருதைத் திரும்பக் கொடுத்தார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 2, 2011

பிரபலமான சமூக சேவையாளரும், மக்சேசே விருது பெற்றவருமான சந்தீப் பாண்டே ஊழலுக்கு எதிரான தனது குரலை வலுப்படுத்தத் தான் இந்திய அரசிடம் இருந்து பெற்ற உயர் விருது ஒன்றைத் திரும்பக் கொடுத்துள்ளார்.


இந்திய அரசாங்கத்தின் "வேலைக்காக வேலை" என்ற திட்டத்தை மக்களிடையே பரப்ப எடுத்த முயற்சிகளுக்காக இவருக்கு உயர் விருதும் 44,000 இந்திய ரூபாய்கள் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. இவ்வேலைத் திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டொன்றிற்கு 100 நாட்கள் வேலை உறுதிப்படுத்தப்பட்டது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் வறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்விருதைத் திரும்பக் கொடுத்துள்ளார். ஹார்டோய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவரின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.620,000 அரசுப் பணத்தைத் திருடியதோடு மட்டுமல்லாமல், காவல்துறையினருக்கு முன்னிலையில் தலித் இன மக்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளதாக பாண்டே கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் விலாசுராவ் தேஷ்முக்கிற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ”இம்முறைப்பாடு குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அரசின் வேலைத்திட்டங்களில் அரசியலும், ஊழலும் மலிந்து காணப்படுகின்றன,” என அவர் தெரிவித்தார்.


தனது திட்டங்கள் மூலம் இந்தியாவின் வறிய சிறுவர்களுக்கு அவர் அளித்த உதவிகளுக்காக பிலிப்பீன்சின் மக்சேசே விருது 2002 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.


மூலம்[தொகு]