சர்ச்சைக்குரிய பாபர் மசூதிப் பகுதியை மூன்றாகப் பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 1, 2010


இராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் வழிபடப்படும் ஜென்ம பூமி, பாபர் கட்டிய மசூதி என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் பாபர் மசூதி வழிபாட்டிடம் ஆகியவை தொடர்பான சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேலான வழக்கில் மிகுந்த பரபரப்புக்கு இடையே நேற்று அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியிருக்கிறது.


படிமம்:Babri rearview.jpg
1992 இல் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன் பாபர் மசூதி

இதன்படி, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதி சுன்னி வக்ஃப் வாரியம் என்ற முஸ்லிம் அமைப்புக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்ற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி இந்து மகா சபைக்கும் அளிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அத்துடன் குழந்தை வடிவில் ராமர் சிலை இருக்கும் இப்போதைய வழிபாட்டிடம் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இன்னும் 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையிலேயே இந்த இடம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


நீதிபதிகள் அகர்வால், எஸ்.வி. கான் ஆகியோர், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி தரம்வீர் சர்மா, அந்தப் பகுதி முழுவதும் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


கடந்த 1992-ம் ஆண்டு இந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் நடுப்பகுதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், இந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.


1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்