சவூதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், ஜனவரி 9, 2013

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தான் பணிபுரிந்த வீட்டில் குழந்தைக்குப் பால் கொடுத்த போது அக்குழந்தை மரணமடைந்ததை அடுத்து ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு சவுதி நீதிமன்றத்தால் இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது.


ரிசானாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரேபிய அரசு அதற்கு இணங்காது ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனையை நிறைவேற்றி உள்ளது.


ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.


இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது.


இதேவேளை சவூதி அரேபியாவில், இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.


ரிசானா நபீக் மூதூரை சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்றை சேர்ந்தவராவார். குடும்ப வறுமை காரணமாக 17வயதில் வீட்டுப்பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg