சிங்கப்பூர் அமைச்சரவையில் நான்கு தமிழர்கள், தர்மனுக்கு கூடுதலாக துணைப் பிரதமர் பதவி

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 20, 2011

மே 7 இல் நடந்த சிங்கப்பூர் பொதுத்தேர்தல்களை அடுத்து புதிய அமைச்சரவை பற்றிய விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி தர்மன் சண்முகரத்தினம் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கா. சண்முகம், எஸ். ஈசுவரன், விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.


துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம்

யாழ்ப்பாண வம்சாவழித் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் தற்போது கவனித்து வரும் நிதி அமைச்சு பொறுப்புடன் கூடுதலாக மனிதவள அமைச்சராகவும் அவர் செயல்படுவார் என்றும் நாட்டின் பொருளியல் மற்றும் சமூகக் கொள்கைகளை ஒருங்கிணைப்பது அவரது பொறுப்பின் கீழ் வரும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


வெளியுறவு அமைச்சர் பதவிக்கு கா. சண்முகம் தெரிவு செய்யப்பட்டார். முன்பு அவர் கவனித்த வந்த சட்ட அமைச்சர் பொறுப்பிலும் சண்முகம் தொடர்ந்து செயல்படுவார். எஸ். ஈஸ்வரன் பிரதமர் அலுவலக அமைச்சர் பொறுப்புடன், உட்துறை அமைச்சு, வர்த்தகத் தொழில் அமைச்சு ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராகவும் செயல்படுவார். முன்பு சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விவியன் பாலகிருஷ்ணன், புதிய சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சராகிறார்.


சிங்கப்பூரில் கடந்த ஏழாம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவருமான லீ குவான் யூ அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார். இதேபோன்று மற்றுமொரு முன்னாள் பிரதமரான கோ சோக் தாங்குங் அமைச்சரவையிலிருந்து விலகினார். இதனையடுத்து 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை பிரதமர் லீ சியன் லூங் உருவாக்கினார். இவர் லீ குவான் யூவின் மகனாவார்.


“திருப்புமுனை தேர்தலுக்குப் பிறகு நாம் நமது கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. புதிய தலைமுறை சிங்கப்பூரர்களுடன் பணியாற்றவும் அதிக சிக்கலான சூழ்நிலையில் சிங்கப்பூரை முன்நடத்திச் செல்லவும் புதிய தோற்றமுடைய அமைச்சரவையை அமைக்க வேண்டியதாயிற்று,” என்று பிரதமர் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். அமைச்சரவையின் பதவிகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் பதவியேற்புச் சடங்குக்குப் பிறகு நடப்புக்கு வரும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]