சிரியா தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 26, 2012

சிரியாவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற அரசுப் படைகளின் தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 90 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.


ஹூலா நகரத்தில் இடம்பெற்ற இத்தாக்குதல்கள் பன்னாட்டுச் சட்டங்களைப் புறக்கணிப்பதாக உள்ளது என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். ஆயுதபாணிகளான தீவிரவாதிகளே இத்தாக்குதல்களை நடத்தியதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது.


கடந்த 2011 மார்ச் மாதத்தில் சிரிய அரசுத்தலைவர் பசார் அல்-அசாதின் ஆட்சிக்கு எதிரான எழுச்சி ஆரம்பித்ததற்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனக் கூறப்படுகிறது.


இறந்தவர்களில் பலர் எறிகணைத் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையோர் சஹீபா என்றழைக்கப்படும் சிரியத் துணை இராணுவக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சிரியாவில் கோஃபி அன்னான் தலைமையில் ஐநாவின் 250 கண்காணிப்பாளர்கள் நிலை கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சிகள் ஆரம்பித்து இதுவரை 10,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]