சிரியா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 26, 2013

சிரியா உள்நாட்டுப் போரில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார். இது கடுமையான போர்க்குற்றம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


அமெரிக்கப் புலனாய்வுத் துறை, சிரியா சிறிய அளவில் நரம்பைப் பாதிக்கும் 'சரின்' என்ற வேதியியல் ஆயுதத்தை பயன்படுத்தியாக நம்புகிறது. அமெரிக்கா கடைசியாக தனக்கு கிடைத்த புலனாய்வு செய்திகளின் படி வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.


சிரியா தான் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதாக சொல்லப்படுவது பொய் என்று கூறியுள்ளது. சிரியா அதிக அளவிளான வேதியியல் ஆயுதங்களை வைத்திருப்பதாக கருதப்படுகிறது. வேதியியல் ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக பல குற்றசாட்டுகள் இருந்தாலும் அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை.


சிரியா உள்நாட்டுப் போரில் வேதியியல் ஆயுதத்தை பயன்படுத்தினால் அமெரிக்கா தன் படைகளை கொண்டு தலையிடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா டிசம்பர் மாதம் எச்சரித்திருந்தார். அமெரிக்க மேலவை உறுப்பினர் (செனட்) ஜான் மெக்கெய்ன் சிரிய அரசு எதிர்ப்புப் படைகளுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார்.


மூலம்[தொகு]