சிரிய இராணுவத் தாக்குதலில் சண்டே டைம்சு செய்தியாளர் மரீ கோல்வின் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து

வியாழன், பெப்ரவரி 23, 2012

சிரியாவில் தங்கியிருந்து செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்த சண்டே டைம்சு பத்திரிகையின் செய்தியாளர் மரீ கோல்வினும் பிரெஞ்சுப் புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக்சும் ஓம்சு நகரில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.


சிரியாவின் ஓம்சு நகரின் பாபா அமர் பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மீது சிரிய இராணுவத்தினர் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்திய போதே இவர்கள் இறந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


பாபா அமர் என்கிற பகுதியில் இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த வீடு, அரச எதிர்ப்பாளர்களின் தற்காலிக ஊடக மையமாகச் செயற்பட்டு வந்தது. புதன்கிழமை காலை இந்தக் கட்டிடத்தின்மீது ஷெல் தாக்கியது. அதைத் தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் மேற்குலக செய்தியாளர்கள் சிரியாவுக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் அங்கே சென்றபடி இருக்கிறார்கள்.


பிரெஞ்சு நாட்டின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கில்லிஸ் ஜாக்குயர், சிரிய அரசு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் ஓம்சு நகருக்கு சென்றபோது கடந்தமாதம் கொல்லப்பட்டார்.


சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டு செய்தியாளரான மேரி கால்வின் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். உலகின் மோதல் நடக்கும் பிரதேசங்களில் அவர் இதற்கு முன்னரும் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கொசோவோ, செசென்யா மற்றும் பல அரபு நாடுகளிலும் அவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். 2001 ஆம் ஆண்டு இலங்கையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர் செய்தி சேகரித்தபோது அவருக்கு ஏற்பட்ட காயத்தில் அவர் தனது ஒரு கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்[தொகு]