உள்ளடக்கத்துக்குச் செல்

சிரிய வன்முறைகளில் அரசுப் படைகளினால் 2000 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 5, 2011

சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அரசுப் படைகளினால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலர் இலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களில் ஹமா நகரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஹமா நகரப் பகுதியில் குறைந்தது 45 பொது மக்களைச் சிரியப் படையினர் கொன்றுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.


பொது மக்கள் மீது துப்பாக்கிகள், மற்றும் தாங்கிகள் தாக்குதல் நடத்துவதாகவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிகழ்வதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், பொதுமக்கள் மீது தாக்குல் நடத்திவரும் சிரியா அரசுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா போன்று சிரியாவுடன் நீண்ட காலமாக நட்புறவைப் பேணிவரும் நாடுகளும் இக்கண்டன அறிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளன.


துனீசியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம் தேதி முதல், அரசுத்தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்கள் மீதான அரசின் அடக்குமுறைகளினால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மீண்டும், அந்நாட்டின் பல நகரங்களில் அரசுத் தலைவருக்கு எதிராக, மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் துவக்கினர். பரவலாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கெதிராகப் படைப்பலத்தைப் பிரயோகித்தல் என்பவற்றைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா.வின் அறிக்கை வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அனைத்துத் தரப்பும் இயன்றவரை பொறுமையைக் கடைப்பிடித்து வன்முறைகளிலிருந்து விலகி இருக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]