உள்ளடக்கத்துக்குச் செல்

சிலியின் முன்னாள் தலைவர் சல்வடோர் அலண்டேயின் உடல் தோண்டி எடுக்க உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 18, 2011

மனித உரிமை மீறல்கள் விசாரணைக்காக சிலியின் முன்னாள் அரசுத்தலைவர் சல்வடோர் அலண்டேயின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.


சல்வடோர் அலண்டே

1973 ஆம் ஆண்டில் ஆகுஸ்தோ பினொச்சே இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். இதன் போது அப்போதைய அரசுத்தலைவர் சல்வடோர் அலண்டே தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது நண்பரும் சியூபாத் தலைவருமான பிடெல் கஸ்ட்ரோ அவருக்களித்த துப்பாக்கி மூலம் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாக இராணுவத்தினர் கூறினர். போர் வானூர்திகள் மூலமும், தாங்கிகள் மூலமும் பெரும் தாக்குதலுக்குள்ளான அரசுத்தலைவர் மாளிகையில் அலண்டேயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்போது உண்மையில் அலண்டே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மே மாதக் கடைசியில் இவரது உடல் தோண்டி எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இராணுவத் தலைவர் பினொச்சேயின் 1990 ஆம் ஆண்டு வரையான ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கனக்கானோர் படுகொலை செய்யப்பட்டும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும் உள்ளனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.


அலண்டேயின் ஆதரவாளர்கள் பலர் அவர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார் என நம்புகின்றனர். அலண்டே 1970 இல் இடம்பெற்ர தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் என்ற பெயரைப் பெற்றார். சோவியத் ஆதரவு பெற்ற மார்க்சியவாதியான அலண்டே தொழிற்சாலைகள், மற்றும் பண்ணைகளைத் தேசிய மயமாக்கினார்.


இவரது பொருளாதார சீர்திருத்தங்கள் அமெரிக்காவைக் கோபத்துக்குள்ளாக்கியது. அவருக்கெதிரான இராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது. ஜெனரல் பினோச்சேயின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் விசாரணைகளை எதிர்கொண்ட வேளையில் தனது 91வது அகவையில் 2006 ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.


மூலம்