சிலியின் விமானம் ஒன்று 21 பேருடன் பசிபிக் கடலில் வீழ்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்தெம்பர் 3, 2011

21 பேருடன் சென்ற சிலியின் விமானப் படை விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் சிலியின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவரும் அடங்குவார்.


காசா-212 விமானம் இரண்டு தடவைகள் யுவான் பெர்னாண்டஸ் தீவில் தரையிறங்க முற்பட்டதாகவும், அதன் பின்னர் காணாமல் போனதாகவும் சிலியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அண்ட்ரெசு அலமான் தெரிவித்தார். காலநிலை மோசமானதாக இருந்ததாகத் தெரிவித்த தீவின் முதல்வர் பயணிகளின் பயணப் பொதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிவித்தார்.


தொலைக்காட்சித் தொகுப்பாளர் பிலிப் கமிரோகா என்பவரும் மேலும் நான்கு தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களும் இறந்தவர்களில் அடங்குவர். "விபத்து நடந்துள்ளதாகவே நாம் நம்புகிறோம், எவரும் உயிர் தப்பவில்லை," என நகர முதல்வர் தெரிவித்தார்.


இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிலியின் அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா ஆறுதல் தெரிவித்தார்.


சிலித் தீவுகளில் சென்ற ஆண்டு இடம்பெற்ற பெரும் நலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைக்குப் பின்னரான தாக்கங்கள் குறித்து நிகழ்ச்சி தயாரிப்பதற்காக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் குழு அங்கு சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டது. சிலியின் கரையில் இருந்து 670 கிமீ தூரத்தில் யுவான் பெர்னான்டஸ் தீவுகள் அமைந்துள்ளன.


மூலம்[தொகு]