உள்ளடக்கத்துக்குச் செல்

சீனப் புத்தாண்டு: களைகட்டியது ஆசியா

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 10, 2013

ஆசியாக் கண்டத்தின் வருடாந்திர விடுமுறைக் காலத்தைக் குறிக்கும் சீனப் புத்தாண்டினை, பெரும்பாலான ஆசிய நாடுகளில் கோடிக்கணக்கானோர் கொண்டாடி வருகின்றனர்.


‘டிராகன் வருடம்’ முடிந்து ‘பாம்பு வருடம்’ ஆரம்பமாகிறது. சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான நள்ளிரவில் (நேற்றிரவு), வாண வேடிக்கைகளுடன் குடும்பத்தினர் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடந்தன. சீன மக்களால் ‘பாம்பு’ என்பது நல்லறிவு, அழகு, புத்திசாலித்தனம் இவற்றோடு தொடர்புபடுத்தப்படுகிறது; பெருமைமிக்கதாகவும் கோபத்தன்மை உடையதாகவும் கருதப்படுகின்றது.


சீனாவில் ஏறத்தாழ 20 கோடி பேர் ‘குடும்பத்துடன் ஐக்கியமாகும் நிகழ்வு’களுக்காக பயணம் செய்திருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. விடுமுறைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அடுத்த ஒருவார காலத்திற்கு அரசு அலுவலகங்களும், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக பரிவர்த்தனைகளும் மூடப்படும்.


சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், வழக்கத்தைவிட குறைவான அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், பட்டாசு விற்பனையில் 37 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டினைக் கருத்தில்கொண்டு நகர நிர்வாகம் கேட்டுகொண்டதன்பேரில், பொதுமக்கள் குறைந்த அளவில் பட்டாசுகளை கொளுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவுசுதிரேலியப் பெருநகர் சிட்னியிலும் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. சீன மரபுவழியைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் அவுசுதிரேலியாவில் வாழ்கின்றனர்.மூலம்

[தொகு]