உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவின் மனித உரிமை ஆர்வலர் சென் குவாங்சென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 20, 2012

சீனாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சென் குவாங்சென் என்பவர் தனது புதிய வாழ்வை ஆரம்பிக்கவென குடும்பத்துடன் நியூயோர்க் வந்து சேர்ந்தார். வழக்கறிஞரான இவர் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் புத்தாய்வு மாணவராகச் சேரவிருக்கிறார்.


சென் குவாங்சென்

பிறவிக் குருடரான இவர் கடந்த மாதம் வீட்டுக் காவலில் இருந்து தப்பி பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடைந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தூதரகப் போர் இடம்பெற்று வந்தது. அவர் ஆறு நாட்கள் தூதரகத்தில் தங்கியிருந்தார்.


தனது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் தற்போது அங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகலாம் என நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சென் அச்சம் தெரிவித்தார். தனக்கு உதவி செய்த அமெரிக்க அதிகாரிகளுக்கும் நண்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பெய்ஜிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென் நேற்று சனிக்கிழமை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு நியூயோர்க்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார். இவருடன் அவரது மனைவி, மற்றும் ஆறு, எட்டு வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் நியூயோர்க் வந்து சேர்ந்தனர்.


சென் குவாங்சென் சீனாவின் ஒரு-பிள்ளைக் கொள்கை, மற்றும் கட்டாயக் கருக்கலைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் இவர் 2006 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.


மூலம்

[தொகு]