உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 25, 2011

சீனாவில் அதி வேகத் தொடருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், 35 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 210 பேர் காயமடைந்தனர்.


சீனாவின் தென்பகுதியில் உள்ள சேச்சியாங் மாகாணத்தில், வென்சூ நகரிலிருந்து பூசூ நகருக்குச் சென்று கொண்டிருந்த புல்லட் வண்டி என அழைக்கப்படும் டி- 3115 அதிவேகத் தொடருந்து வண்டி வழியில் மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அத்தடத்தில் பின்புறமாக மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் வந்த மற்றொரு தொடருந்து மோதியது. விபத்து நடந்த போது, இரண்டு வண்டிகளிலும் 1,400 பயணிகள் இருந்தனர்.


மீட்புப் பணிகள் விரைந்து நடக்க சீன அரசுத்தலைவர் ஹூ சிண்டாவோ உத்தரவிட்டுள்ளார். சீனாவில் புல்லட் தொடருந்து விபத்திற்குள்ளாவது இதுவே முதன் முறையாகும். "சீனா டெய்லி' வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்,"புல்லட் ரயில்கள் துவக்கப்பட்ட இரு வாரங்களிலேயே, அவற்றின் சேவைகள் குறித்து மிக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


விபத்தை அடுத்து சீன ரெயில்வேயின் மூன்று உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு கருதி 58 அதிவேக தொடருந்து சேவைகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மூலம்[தொகு]