உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 4, 2013

தென் மேற்கு சீனாவின் குன்மிங் நகரத்துக்கு அருகில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், இதில் கலந்து கொண்டவர்கள் 200 பேர் என்று தெரிவித்தது. ஆனால் வலைப்பதிவர்கள், கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2000 என்று கூறுகிறார்கள்.


சில போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்தும் பதாகைகளை ஆட்டியும் பாராசைலின்னினால் [paraxylene (PX)] ஏற்படும் கெடுதல்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். தங்களுக்கு தேவை சுகாதாரம், நாங்கள் வாழ விரும்புகிறோம், குன்மிங்கிலிருந்து பாராசைலினை வெளியேற்று என்று கோசம் எழுப்பினர். சீன இயற்கை பெட்ரோலிய கழகம் அவ்வாலையில் இருந்து ஆண்டுக்கு 500,000 டன் பாராசைலின் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் இருந்து பாராசைலின் (paraxylene (PX)) தயாரிக்கப்படும். ஆடை தயாரிக்கப்படும் போது பயன்படும் பாலிஸ்டர் தயாரிக்க பாராசைலின் பயன்படுகிறது.


அருகில் அமைக்கவிருக்கும் வேதியியல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைப் போராட வருமாறு துண்டு பிரசுரம் செங்டூ நகரில் காணப்பட்டதால் செங்டூ நகர் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு எதிரே காவலர்கள் காணப்பட்டதாக நகர மக்கள் தெரிவித்தனர். எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என சீன அரசு துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தியது. நிலநடுக்க தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒத்திகை பார்க்கவே காவலர்கள் செங்டூ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டனர் என்று சீன அரசு கூறியது. எதிர்ப்பு போராட்டம் செங்டூ நகரில் நடைபெறவில்லை.


கடந்த ஆண்டு நிங்போ நகரில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தால் அங்கு அமைக்கப்பட இருந்த பாராசைலின் உற்பத்திக்கான வேதியியல் ஆலை திட்டம் கைவிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் டாலியன் நகரில் பாராசைலின் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போராட்டத்தால் சீன அரசு ஆலை தொடங்கும் திட்டத்தை நிறுத்தியது. ஆனால் பின்பு அங்கு அவ்வாலையைத் தொடங்கியது. 2007ல் சியாமென் நகரில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தால் அங்கு அமைக்கப்பட இருந்த பாராசைலின் உற்பத்திக்கான வேதியியல் ஆலைத் திட்டம் கைவிடப்பட்டது.


வேதியியல் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில ஆண்டுகளாக சீனாவின் நகர்ப்புறங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]