உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் 200 இற்கும் அதிகமான அரிதான வலசை செல்லும் பறவைகள் தனித்து விடப்பட்டன

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 16, 2012

இருநூறுக்கும் அதிகமான மிக அரிதான வலசை செல்லும் கிழக்கத்திய வெள்ளை நாரைகள் சீனாவின் வடக்கே தியான்சின் மாவட்டத்தின் சதுப்பு நிலங்களில் தனித்து விடப்பட்டுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.


கிழக்கத்திய வெள்ளை நாரைகள்

கிழக்கத்திய வெள்ளை நாரைகள் நவம்பர் இறுதியில் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டியவை என்றும், ஆனாலும் தற்போதும் அவை பனி நிறைந்த பெய்தாகங் இயற்கை வனத்தில் காணப்படுவதாகவும், இது இவ்வாண்டின் ஓர் அரிதான நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.


வெள்ளியன்று பெரும் பனிக்கட்டிப் பொழிவு இருந்ததால் இப்பறவைகளுக்கு உணவு கிடைப்பது பெரும் பாடாயுள்ளது. இப்பறவைகள் நச்சு உணவுகளை உண்டிருக்கலாம் என்றோ அல்லது பறப்பதற்கு ஏற்ற உடல்நிலையில் அவை இல்லை என்றோ இயற்கை வன அதிகாரிகள் நம்புகின்றனர்.


சிறிய வகை மீன்களை வன அதிகாரிகள் இப்பறவைகளுக்கு வெள்ளியிரவு உணவாகக் கொடுத்துள்ளார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையும் மேலும் உணவைக் கொடுக்கவிருக்கிறார்கள்.


"இவற்றை உண்டு விட்டு அவை தெற்கு நோக்கிச் செல்லாமல் இருந்தால், இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கும்," வன அதிகாரி வாங் தெரிவித்தார்.


கடந்த மாதம் நவம்பர் 20 இல் இந்த வெள்ளை நாரைகளில் இருபது இறந்திருக்கக் காணப்பட்டன. மேலும் 13 நாரைகள் பூச்சிக்கொல்லி கலந்த நீரை அருந்தியதால நச்சூட்டப்பட்டன. நீரில் பூச்சிக்கொல்லி கலந்த இருவர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கிழக்கத்திய வெள்ளை நாரைகள் உலகில் 2,500 முதல் 3,000 வரையிலேயே எஞ்சியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகை நாரைகள் அருகி வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக வடகிழக்கே வாழ்ந்து வரும் இவ்வகை நாரைகள் பனிக்காலங்களில் தெற்கு நோக்கி நகருகின்றன. இவைகள் வலசை போகும் வழியிலேயே பெய்தாகங் இயற்கை வனம் காணப்படுகிறது.


மூலம்

[தொகு]