சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 16, 2010

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைகளின் கீழ் உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.


ஆல்ப்ஸ் மலைத்தொடரின் கீழ் கோத்தார்ட் சுரங்கப் பாதை

57 கிமீ நீளமான கோத்தார்ட் தொடருந்துச் சுரங்கப்பாதை அமைக்க 14 ஆண்டுகள் பிடித்துள்ளன. இப்பாதை 2016 ஆம் ஆண்டிலேயே சேவையாற்றத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஐரோப்பாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவுப் போக்குவரத்துப் பாதையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகம் இவ்வழியில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிச் நகருக்கும் மிலான் நகருக்கும் இடையேயான போக்குவரத்து நேரம் இதனால் ஒன்றரை மணித்தியாலங்களால் குறையும். ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக ஒரு நாளைக்கு 300 தொடருந்துகள் செல்லும் எனவும் கூறப்படுகிறது.


சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் நேற்று உள்ளூர் நேரம் 1415 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிகழ்வு ஐரோப்பா முழுவதும் நேரடியாக திலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது.


பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பு, எட்டுப் பணியாளர்களின் உயிர்த்தியாகம், 10 பில்லியன் அமெரிக்க டொலர் பொருட்செலவு என்பவற்றால், உலகின் மிக நீளமான மலைக்கீழ் சுரங்கப்பாதை வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது.


மூலம்