சூரியனில் மோதிய ஐசான் வால்வெள்ளியின் சிறு பகுதி தப்பியது
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
வெள்ளி, நவம்பர் 29, 2013
சூரியனில் மோதி அழிந்ததாகக் கருதப்படும் ஐசான் வால்வெள்ளியின் ஒரு சிறு பகுதி அல்லது முழுவதுமே இன்னமும் அழியாமல் எஞ்சியிருக்கலாம் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பனிக்கட்டியும் தூசுகளும் நிறைந்த இந்த மாபெரும் வால்வெள்ளி சூரியனை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல முயன்ற நிலையில், நேற்று வியாழக்கிழமை சூரிய ஈர்ப்பு விசையின் காரணமாக அதன் மீது மோதியது. சூரியனின் பின்புறமாகச் சென்ற இந்த வால்வெள்ளி மீளத் திரும்பாத நிலையில் அது அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தற்போது கிடைக்கப்பட்டுள்ள படங்களின் படி வால்வெள்ளியில் சிறு பகுதி இன்னமும் ஒளிர்வீசிக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இன்னும் சில மணித்தியாலங்கள அல்லது நாட்களுக்குள் இவ்வால் நட்சத்திரத்துக்கு எதுவும் நடக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இப்போது காணப்படும் துண்டு தொடர்ந்து ஒளிர் வீசலாம் அல்லது மறைந்தே விடலாம்.
"கடந்த ஓராண்டு காலமாக இந்த வால்வெள்ளியை நாம் அவதானித்து வருகிறோம். இதன் நடவடிக்கை எமக்கு வியப்பாகவும் அதே வேளையில் விசித்திரமாகவும் உள்ளது," என வானியற்பியலாளர் கார்ல் பாட்டம்ஸ் கூறினார்.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 1.2 மில்லியன் கிமீ உயரத்தில் சூரியனைத் தாண்டும் போது சூரியனின் கதிர்வீச்சும் அதன் வெப்பமும் வால்வெள்ளியைத் தீவிரமாகத் தாக்கியிருக்கும். 2000 செ. இற்கும் அதிகமான வெப்பநிலையில் வால்வெள்ளியின் பனிக்கட்டி உருகி ஆவியாகப் போயிருக்கலாம்.
ஐசான் வால்வெள்ளி 2012 செப்டம்பர் 21 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்கு பன்னாட்டு அறிவியல் ஓளிமப் பிணையத்தில் உள்ள 0.4 மீட்டர் (16") பிரதிபலிப்பு தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. வால்வெள்ளி சூரியனை, சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக நெருங்க கிட்டத்தட்ட 55 லட்சம் ஆண்டுகள் பயணிக்க வேண்டியிருந்தது.
இன்னும் 11 மாதங்களில் சைடிங் ஸ்ப்ரிங் என்ற வால்வெள்ளி செவ்வாய்க் கோளை 100,000 கிமீ தூரத்தில் அண்மிக்கும். 2014 நவம்பரில், ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் வியாழன் கோளுக்கு அண்மையில் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ என்ற வால்வெள்ளியை சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த 4கிமீ அகலமுள்ள இந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியைக் கீழிறக்கும்.
மூலம்
[தொகு]- Hope still for 'dead' Comet Ison, பிபிசி, நவம்பர் 29, 2013
- Comet ISON's fatal flight?, ஏபிசி, நவம்பர் 29, 2013