உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 7, 2013

பிலிப்பைன்சில் உள்ள மயோன் எரிமலை திடீரென வெடித்ததில் செருமனியைச் சேர்ந்த நான்கு மலையேறிகளும், அவர்களது பிலிப்பீனிய வழிகாட்டியும் கொல்லப்பட்டனர்.


தலைநகர் மணிலாவில் இருந்து தென்கிழக்கே 330 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை இன்று செவ்வாய்க்க்கிழமை காலையில் தூசுகளையும், பாறைத்துண்டுகளையும் கக்க ஆரம்பித்தது. இவ்வெரிமலை ஏறத்தாழக் கூம்பு வடிவில் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.


2009, டிசம்பர் 18 இல் மயோன் எரிமலை வெடிப்பு

இவ்வெரிமலை வெடிப்பு சுமார் ஒரு நிமிட நேரம் மட்டுமே நீடித்தது. "ஏழு மலையேறிகள் காயமடைந்தனர்," என பிலிப்பீனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிமலை வெடிப்பை அடுத்து மழை போல் வீழ்ந்த பாறைகளினால் தாக்கப்பட்டே ஐவர் உயிரிழந்ததாக மலையேறி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் நடந்த போது மொத்தம் இருபது பேர் மலை உச்சியை அடைவதற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.


இந்த எரிமலைச் சீறல் ஒரு சிறிய நிகழ்வென்றும், 73 செக்கன்களே இது நீடித்திருந்ததென்றும், 500 மீட்டர் உயரத்திற்கு தூசிகளை எறிந்ததாகவும் பிலிப்பீனிய எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது.


மயோன் எரிமலை பதிவுகள் ஆரம்பமான ஆண்டில் இருந்து 48 தடவைகள் வெடித்துள்ளது. 1814 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெடிப்பில் 1,200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல நகரங்கள் அழிந்தன. 2009 இல் இடம்பெற்ற வெடிப்பில் பல்லாயிரக்கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.


மூலம்

[தொகு]