உள்ளடக்கத்துக்குச் செல்

செக் குடியரசு அரசுத்தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மிலோசு செமான் வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 27, 2013

செக் குடியரசின் வரலாற்றில் முதற் தடவையாக இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மிலோசு செமான் வெற்றி பெற்றார்.


மிலோசு செமான்

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மிலோசு செமான் 55% வாக்குகளும், வெளியுறவுத்துறை அமைச்சர் கரெல் சுவார்சென்பர்க் 45% வாக்குகளும் பெற்றனர். தற்போது அரசுத்தலைவராகப் பதவியில் இருக்கும் வாத்சுலாவ் கிளவுசு பத்தாண்டுகள் பதவியில் இருந்த பின்னர் இவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் பதவியில் இருந்து விலகுவார்.


செக் குடியரசின் அரசுத்தலைவருக்கு முழுமையான நிறைவேற்றதிகாரம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தல், அரசியலமைப்பு நீதிமன்றம், மற்றும் மத்திய வங்கி போன்ற அமைப்புகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமித்தல் போன்ற முக்கிய சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அரசின் நாளாந்தப் பணிகளைக் கொண்டு நடத்தும் அதிகாரம் பிரதமருக்கே உண்டு.


10 ஆண்டுகளுக்கு முன்னர் செமான் அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அவருக்கு அவரது சொந்தக் கட்சியினரே வாக்களித்திருக்கவில்லை. பெருமளவு மது அருந்துபவரும், தொடர்ச்சியான புகை பிடிக்கும் பழக்கமும் உடையவர் செமான் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் தற்போது அரசியலில் குதித்துள்ளார்.


சமூக சனநாயகக் கட்சித் தலைவரான 70 வயதாகும் மிலோசு செமான் வாத்சுலாவ் கிளவுசின் அரசில் 1998 முதல் 2002 வரை பிரதமராகப் பதவி வகித்தார்.


மூலம்

[தொகு]