உள்ளடக்கத்துக்குச் செல்

செப்சிஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 9, 2010


செப்சிஸ் (sepsis) எனப்படும் இரத்தத்தில் நஞ்சு கலக்கும் உயிர்க்கொல்லி நோய்க்கு சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்துள்ளனர்.


இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் செப்சிஸ் நோய் ஏற்படுகிறது. இந்நோய் ஆண்டுதோறும் உலகின் ஏறக்குறைய 20 மில்லியன் பேரை பாதிக்கிறது. பெரும்பாலானோர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர்.


பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நோய்க்கிருமி கட்டுப்படுத்தி" (ஆன்டிபயோட்டிக்) மருந்து கொடுக்கப்படுகிறது. இம்முறை மூலமே பல தசாப்தங்களாக நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. எலிகளின் இரத்தத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் sphingosine kinase 1 அல்லது SphK1 என்ற மூலக்கூற்றைத் தடுக்கும் முறையில் இப்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலிரியோ மெலன்டெஸ் என்பவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் அவரது குழுவும் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.


இது குறித்த ஆய்வறிக்கை ஜூன் 4 ஆம் நாள் "சயன்ஸ்" அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.


வெள்ளை அணுக்களை அழிக்கும் கிருமிகளை ஒடுக்கக் கொடுக்கப்படும் ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளுடன், இந்த ‘5சி’ மருந்தையும் சேர்த்துக் கொடுத்தால் நோயைக் குணப்படுத்தலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.


இம்மருந்து எலிக்கு சோதிக்கப்பட்டதில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆய்வுக் கூட சோதனை செய்யப்பட்ட பின்னரே, மனிதர்களில் இந்த மருந்து சோதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


இம்முறை வெற்றி அளித்தால் இன்னும் ஆறு ஆண்டுகளுக்குள் இம்மருந்தை விற்பனைக்கு விடுவதற்கு விண்ணப்பிப்போம் என பேராசிரியர் மெலண்டெஸ் தெரிவித்தார்.

மூலம்[தொகு]