செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதை சிறுகோள் மோதலால் உருவான குழிகள் மூலம் அறியலாம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 16, 2012

சிறுகோள்களின் தாக்கத்தால் ஏற்படும் குழிகளை ஆராய்ந்தால் செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் இருக்கும் சாத்தியங்கள் குறித்து அறியலாம் எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் வீழ்ந்த சிறுகோள் (asteroid) ஏற்படுத்திய குழியை ஆராய்ந்த எடின்பரோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் அங்கு உயிரினங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறான குழிகள் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர்.


வேறு கோள்களில் உள்ள இவ்வாறான குழிகள் உயிரினங்களை மறைத்து வைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நுண்ணுயிர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் செசாபீக் என்ற இடத்தில் உள்ள சிறுகோள் தாக்கிய குழி ஒன்றில் 2 கிமீ ஆழத்திற்கு ஆய்வாளர்கள் தோண்டினர். நுண்ணுயிர்கள் பாறைகள் முழுவதும் பரந்து காணப்பட்டதாக மண் மாதிரிகள் தெரிவிக்கின்றன.


சிறுகோள் மோதியதால் விளைந்த வெப்பம் காரணமாக மேற்பரப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கும் எனவும், ஆனால் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளின் வெடிப்புகளில் உயிர் வாழ்வதற்கு ஏதுவான நீர் மற்றும் ஊட்டப் பொருட்கள் தடையின்றிச் செல்லக்கூடியதாக இருக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


"செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதை உறுதிப்படுத்த இவ்வாறான குழிகளை ஆராய்வது நன்மை பயக்கும்," என எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்ல்ஸ் கொக்கெல் தெரிவித்தார். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று வானுயிரியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]