செவ்வாயில் தரையிறங்கி ஆராய புதிய விண்கலத்தை அமெரிக்கா ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 27, 2011

செவ்வாய்க் கோளில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவென மிகவும் ஆற்றல் வாய்ந்த விண்கலம் ஒன்றை நாசா ஏவியுள்ளது.


செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் அல்லது கியூரியோசிட்டி என்ற தளவுளவியின் மாதிரி வடிவம்

ஒரு தொன் எடையுள்ள இந்தத் தரையூர்தி புளோரிடாவில் உள்ள கேப் கேனர்வல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ராக்கெட் ஒன்றின் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.


செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் (Mars Science laboratory, MSL) அல்லது கியூரியோசிட்டி (Curiosity) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தளவூர்தி செவ்வாயை அடைய எட்டரை மாதங்கள் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகத்து மாதத்தில் செவ்வாயில் தரையிறங்கவிருக்கும் இந்த ஆய்வுக்கலம் அக்கோளில் தற்போது அல்லது முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடியதற்கான அறிகுறிகள் உள்ளனவா என்பது உட்பட பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.


செவ்வாய்க் கோளில் உள்ள Gale Crater எனப்படும் மிக ஆழமான பள்ளங்களில் ஒன்றில் இந்த வண்டியை தரையிறக்கிவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பள்ளத்தின் உள்ளே 5 கிமீ உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.


இந்த விண்வெளித் திட்டத்துக்காக அடுத்த இரண்டு புவி ஆண்டுகளில் நாசா 2.5 பில்லியன் டாலர்களை செலவிடவிருக்கிறது. ஆனாலும், இந்தத் தளவுளவியில் பொருத்தப்பட்டுள்ள புளுட்டோனியம் மின்கலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேல் தேவையான ஆற்றலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]