செவ்வாயை நோக்கி உருசியா அனுப்பிய விண்கலம் திசை மாறிச் சென்றது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 9, 2011

செவ்வாயின் சந்திரனில் இருந்து பாறைகளை எடுத்து வரும் 33 மாத காலத் திட்டத்துக்காக உருசியா அனுப்பிய விண்கலம் ஏவிய சில நிமிடங்களில் திசை மாறிச் சென்றது. சரியான திசையில் விண்கலத்தைச் செலுத்தவிருந்த இயந்திரம் செயலிழந்து போனதாக உருசிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஃபோபோஸ்-கிரண்ட் விண்கலத்தின் மாதிரி

ஃபோபோஸ்-கிரண்ட் என அழைக்கப்பட்டும் இந்த விண்கலம் தற்போது பூமியின் சுற்று பாதைக்குச் சென்றுள்ளதாகவும், அவற்றின் மின்கலங்கள் மூன்று நட்களுக்குள் செயலிழக்கும் முன்னர் இதனைத் திருத்த வேண்டும் எனவும் உருசியா கூறியுள்ளது.


இவ்விண்கலம் தன்னுடன் சீனாவின் செவ்வாய்க்கான முதலாவது செயற்கைக்கோளையும் கொண்டு சென்றுள்ளது. யிங்குவோ-1 என்ற இந்த 115கிகி செயற்கைக்கோள் செவ்வாய்க் கோளைச் சுற்றிவர அனுப்பப்படவிருந்தது.


கசக்ஸ்தானில் உள்ள பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 00:16 (உள்ளூர் நேரம்) ஃபோபோசு-கிரண்ட் என்ற இந்த விண்கலம் ஏவப்பட்டது. இவ்விண்கலம் சீர் செய்யப்படுமிடத்து செவ்வாயின் சந்திரனில் இருந்து பாறைகளையும் தூசுகளையும் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் பூமிக்கு இது கொண்டு வரும்.


இந்த விண்கலம் சீர் செய்யப்பட்டு மீளத் தனது பாதைக்குச் செலுத்துவதற்கு முடியும் என நாசா பொறியாளர் ஜேம்ஸ் ஓபர்க் தெரிவித்தார். "இது முடியாத காரியமல்ல," என வர் தெரிவித்தார்.


1960களில் இருந்து உருசியா மொத்தம் 16 விண்கலங்களை செவ்வாயை நோக்கி அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. கடைசியாக அனுப்பிய மார்ஸ்-16 விண்கலம் ஏவிய சிறிது நேரத்திலேயே அழிந்தது.


"கடந்த 15 ஆண்டுகளாக நாம் எந்தப் பெரிய விண்வெளிப் பயணத்தையும் பூர்த்தி செய்யவில்லை," என மாஸ்கோ விண்வெளி ஆய்வுக் கழகத்தின் அறிவியலாளர் அலெக்சாண்டர் சாகரொவ் தெரிவித்தார்.


மூலம்[தொகு]