செவ்வாய்த் தரையுளவி 'கியூரியோசிட்டியின்’ காற்றுணர்கருவி பழுதடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 22, 2012

செவ்வாய்க் கோளுக்கு சென்ற கியூரியோசிட்டி தானியங்கித் தரையுளவி தனது முதலாவது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாயின் காற்று மண்டலத்தை அளவிடுவதற்கு தானியங்கியுடன் பொருத்தப்பட்டுள்ள வானிலை நிலையத்தின் உணர்கருவி பழுதடைந்து விட்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என வாதிக்கும் கியூரியோசிட்டி திட்ட வல்லுனர்கள், இது பழுதடைந்ததால் சில அளவீடுகள் எடுக்க முடியாமல் போகலாம் எனக் கூறுகின்றனர்.


எவ்வாறு இந்த உணர்கருவி பழுதடைந்தது எனக் கண்டுபிடிக்கப்படவில்லை ஆயினும், இந்தத் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கும் போது உணர்கருவிச் சுற்றை அது தாக்கியிருக்கக்கூடும் எனவும், இதனால் அதன் கம்பியிணைப்புகள் அறுந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.


செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் எனவும் அழைக்கப்படும் இந்த தரையுளவி இரண்டு வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தரையிறங்கியது. இது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி ஆய்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய தடையங்களை இது ஆராயும்.


கியூரியோசிட்டியின் வானிலை நிலையம் எசுப்பானிய அறிவியலாளர்களால் தயாரிக்கப்பட்டது. இது வளி மண்டலம், மற்றும் தரை வெப்பநிலைகள், வளி அமுக்கம், ஈரப்பதன், காற்றுத் திசை, வேகம் பேன்றவற்றை அளக்கக்கூடியது.


மூலம்[தொகு]