ஜான்சி ராணி லட்சுமிபாய் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, நவம்பர் 20, 2009

இந்தியாவின் ஜான்சி பகுதியை ஆட்சி செய்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுனர் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Ranilaxmibai-1.JPG

இந்தியாவில் முதலாம் சுதந்திரப்போர் துவங்குவதற்கு (1857) முன்பாக, கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய் எழுதிய இந்த கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத இராச்சியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும் இந்த சுவீகாரத்தை டல்ஹவுசி பிரபு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வெள்ளையர்களை எதிர்த்து ஜான்சி ராணி 1857ஆம் ஆண்டு தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.


வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் (Lewin Bentham Bowring) என்பவர் சேகரித்த ஆவணங்களில் இந்தக் கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார். லட்சுமிபாயின் வரலாறு அதிகமாகப் பதியப்படாத காரணத்தினால் இக்கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான ஆதாரம் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்