உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 21, 2012

இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் பன்னாட்டு இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். தான் இந்தியா வரும்போது தன்னைப் படுகொலை செய்ய சதிகாரர்கள் பணம் கொடுத்து ஆள் வைத்திருக்கக்கூடும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ள நிலையில் தனது வருகையால் விழாவுக்கு வருகின்ற மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிந்து தான் வருவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


சல்மான் ருஷ்டி

இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் ருஷ்டியின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று இசுலாமிய மதப்பள்ளியான தாருல் உலூம் தியோபந்தின் துணைவேந்தர் அப்துல் காசிம் நுமானி கோரிக்கை விடுத்து, சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சில அரசியல் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ருஷ்டி வருகைக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் சட்டப்படித்தான் அதனை அணுக வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யக் கூடாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சீத் கூறியிருந்தார்.


1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய ஒரு நாவலில், இசுலாமியர்களைப் புண்படுத்தியிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராக, ஈரானின் மதத் தலைவரான அயதொல்லா கொமெனி மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்தார். இந்தியாவும் அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. ருஷ்டி இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியிருப்பவர். சல்மான் ருஷ்டி பலமுறை இந்தியா வந்துள்ளார். ஆனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போதுதான் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான வில்லியம் டால்ரிம்பிள் கூறும்போது, 'வெளிநாட்டில் குடியிருந்தாலும் ருஷ்டி இந்தியாவில் பிறந்தவர். அவருக்கு விசா தேவையில்லை. அவர் பலமுறை ஜெய்ப்பூர் வந்திருக்கிறார். ஒருமுறை கூட அவருக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை’ என்றார். இந்நிலையிலே ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]