உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோர்ஜியாவில் அரசுத்தலவர் சக்காஷ்விலியைப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 5, 2013

முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசியிலும், மற்றும் நகரங்களிலும் அரசுத்தலைவர் மிக்கைல் சக்காஷ்விலியைப் பதவி விலகக் கோரி அரச எதிர்ப்பாளர்கள் நேற்றுப் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்றும் முன்னாள் நாடாளுமன்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


சனவரி 20 ஆம் தேதி சக்காஷ்விலியின் இரண்டு ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், சனவரி 20 இற்குள் அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் காலக்கெடு விதித்துள்ளனர். அவர் அதற்குள் பதவி விலகாவிட்டால், நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.


நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் மூலம் சக்காஷ்விலி தனது பதவிக்காலத்தை சட்டவிரோதமாக அக்டோபர் 2013 வரை நீடித்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். முன்னாள் நாடாளுமன்றத்தில் சக்காஷ்விலியின் ஐக்கிய தேசிய இயக்கம் என்ற கட்சியே பெரும்பான்மை பலத்தில் இருந்தது.


அக்டோபர் 1 இல் இடம்பெற்ற தேர்தலில் தொழிலதிபரும், கோடீசுவரருமான பித்சீனா இவானிஷ்விலியின் தலைமையிலான ஜோர்ஜிய கனவு என்ற எதிர்க்கட்சிக் கூட்டணி சக்காஷ்விலியின் ஐக்கிய தேசிய இயக்கத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றது.


புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இவானிஷ்விலியும், அவரது அமைச்சரவையும் சக்காஷ்விலியின் முன்னாள் அரசின் முக்கிய பிரமுகர்களைக் கைது செய்துள்ளது. கட்சியின் ஒன்பதாண்டு கால அரசில் சக்காஷ்விலியும் அவரது கட்சியினரும் நாட்டைப் பாழ்படுத்தி விட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இவ்வாண்டு சனவரி மாதம் முதல் அமுல் படுத்தப்படவிருக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் படி, அரசுத்தலைவரின் (சனாதிபதி) அதிகாரங்கள் பல பிரதமருக்கு மாற்றப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]