டாக்காவில் இடம்பெற்ற தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 4, 2010


வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் மக்கள் நெருக்கடியான பகுதியொன்றில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் காயமடைந்தனர்.


பழம்பெரும் நிம்ட்டோலி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்மாற்றி ஒன்று வெடித்ததனால் ஏற்பட்ட தீ ஐந்து மாடி குடிமனை மற்றும் அருகில் உள்ள கடைகள், மற்றும் குடிசைகளில் பரவியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மாடிக்கட்டடத்தின் உச்சியில் ஒரு திருமண வைபவமும் அந்நேரம் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் குழந்தைகள், பெண்களும் அடங்குவர்.


கடந்த 20 ஆண்டுகளில் டாக்காவில் இடம்பெற்ற தீவிபத்துக்களில் பெரியது இதுவாகும். தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


"கடைகளில் வேதிப் பொருட்கள் பல விற்பனை செய்யப்பட்டு வந்ததால் தீ விரைவாகப் பரவியிருந்தது," என தீயணைப்பு அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


வங்காளதேசப் பிரதமர் காயமடைந்தோரை நேரில் சென்று பார்வையிட்டார். சனிக்கிழமை தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]