டாக்கா கட்டட விபத்து: இறந்தோர் எண்ணிக்கை 900 ஐத் தாண்டிய நிலையில் மேலும் ஒரு விபத்து

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 9, 2013

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் எட்டு மாடித் தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று கடந்த மாதம் இடிந்து வீழ்ந்ததை அடுத்து இறந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், டாக்காவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 8 பேர் கொல்லப்பட்டனர்.


மீர்ப்பூர் தொழிற்துறை நகரில் நேற்றிரவு இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவரும், ஆடைத்தொழிற்சாலையின் உரிமையாளரும் கொல்லப்பட்ட 8 பேரில் அடங்குவர். 11 மாடிக் கட்டடத்தில் இருவரும் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே கட்டடத்தில் தீப்பிடித்துள்ளது. தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்து தீ ஏனைய மாடிகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.


கட்டடம் தீப்பற்றிய போது, பல தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியிருந்ததால், உயிரிழப்புகள் குறைவாக இருந்தன. எவ்வாறு இவ்விபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 24 கட்டட உருக்குலைவு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 912 என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மேலும் 94 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. இக்கட்டத்தில் பல ஆடைத்தொழிற்சாலைகள் இயங்கியிருந்தன. இறந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் 2,500 பேர் வரையில் காயமடைந்தனர், 2,437 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.


பாதுகாப்புக் கருதி 18 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு நேற்று அறிவித்திருந்தது. ரானா பிளாசா கட்டடத்தின் உரிமையாளர் உட்படப் பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]