டெல்லியில் வெளிநாட்டு பயணிகள் சுடப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்தெம்பர் 20, 2010

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரை இந்தியத் தலைநகர் தில்லியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் 25 வயது மதிக்கத்தக்க தாய்வான் நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காயடைந்துள்ளனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தில்லியின் முக்கிய பள்ளிவாசலான ஜாமா மஸ்ஜித்தின் முன்னே ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு நடந்துள்ளது.


இந்தத் தாக்குதலுக்கு இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் தில்லியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தில்லியில் இன்னும் இரண்டே வாரங்களில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என தில்லியின் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்தச் சம்பவத்துக்குப் பின் ஜும்மா மசூதி அருகே மோட்டார் வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்தது. பிரஷர் குக்கரில் இந்த குண்டை பொருத்தி இருந்தனர். குண்டு வெடித்ததில் கார் முழுவதும் தீப் பற்றி எரிந்தது. இது சாதாரண வகைக் குண்டு என்பதால் பெரிய சேதம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த காரின் உரிமையாளர் இந்தக் கார் எப்படி பள்ளிவாசலுக்கு அருகில் வந்தது என்பது தனக்குத்தெரியாது என்று தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]