டோன் விண்கலம் வெஸ்டா சிறுகோளை விட்டு விலகி செரசு குறுங்கோளை நோக்கிச் செல்கிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், செப்டம்பர் 6, 2012

வெஸ்டா சிறுகோளின் (asteroid) சுற்றுவட்டத்தில் கடந்த 13 மாதங்களாகத் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நாசாவின் டோன் என்ற ஆளில்லா விண்கலம் தனது திட்டத்தை முடித்துக் கொண்டு வெஸ்டாவை விட்டு விலகிச் செல்வதாக நாசா அறிவித்துள்ளது.


ஓவியரின் கைவண்ணத்தில் டோன் விண்கலமும் வெஸ்டா (இடது) சிறுகோளும், செரசு குறுங்கோளும் (வலது)

530 கிமீ அகலமுள்ள வெஸ்டா பாறையின் ஈர்ப்பில் இருந்து விலகியதை டோன் விண்கலத்தில் இருந்து நேற்றுப் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற சமிக்கை உறுதிப்படுத்தியதாக நாசா தெரிவிக்கிறது.


தற்போது இது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டையில் உள்ள 950 கிமீ அகலமான செரசு என்ற குறுங்கோளை நோக்கிச் செல்கின்றது. 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இது செரசுவை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


செரசுவை நோக்கிச் செல்ல முன்னர் டோன் விண்கலம் வெஸ்டாவின் வடமுனைப் படங்களை பூமிக்கு அனுப்பியிருந்தது. வெஸ்டாவில் உள்ள மலைகளும், எரிமலைவாய்களையும் முதற்தடவையாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.


டோன் விண்கலம் 2007 செப்டம்பர் 27 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 2011 சூலை 16 ஆம் நாள் வெஸ்டாவின் சுற்றுப்பாதையை அடைந்தது. 2015 பெப்ரவரியில் செரசு குறுங்கோளை அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அடையும் முதல் விண்கலமாக இதுவாகும்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg