உள்ளடக்கத்துக்குச் செல்

தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 28, 2013

தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பினை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட தீர்மானமொன்று, தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்திய நடுவண் அரசின்முன் வைக்கப்படும் தீர்மானமாக இது அமைந்துள்ளது. நேற்றைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து தாக்கல் செய்தார்; முதல்வரின் நீண்ட உரைக்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது.


முன்னதாக, இலங்கைப் பிரச்சினைத் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கோவி. செழியன் (திமுக), கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கணேஷ்குமார் (பாமக), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) முதலிய உறுப்பினர்கள் பேசினர். இதற்கு முதல்வர் பதிலளித்துப் பேசுகையில், 'கோரிக்கைகளை முன்வைக்கும்' தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.


இந்திய அரசை வலியுறுத்தி முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் கூறுகள்
  1. இலங்கை நாட்டினை 'நட்பு நாடு' என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  2. போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான அனைத்துலக புலன்விசாரணை நடக்கவேண்டும்.
  3. போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்கள் அனைத்துலக நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
  4. தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும்வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.
  5. ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, 'தனி ஈழம்' குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவேண்டும்; இதற்கென ஐநா அவையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மூலம்

[தொகு]