தமிழகத்தில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த இயலாது: தமிழக முதல்வர் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 22, 2013

இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க இருப்பதால், தமிழகத்தில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த இயலாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையொன்றில் அறிவித்துள்ளார். நேற்று அவர் விடுத்த நீண்ட அறிக்கையில், "வேறு எங்காவது போட்டிகளை நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகளக் கழகம் கேட்டுக் கொள்ளப்படும்" எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், "விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும், கௌரவத்துடனும் நடத்தப்படவேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது" என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.


20’ஆவது ஆசிய தடகளப் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதத்தில் தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றும், இத்தகவலை அந்நாட்டிற்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்றும் ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்கடிதத்திற்கு பதில் ஏதும் இதுகாறும் வரவில்லை போன்ற தகவல்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள புதிய ஆதாரம் பற்றியும், தமிழக முதல்வர் தனது அறிக்கையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். "பிரபாகரனின் மகன் என்ற காரணத்துக்காக 12 வயது சிறுவனை, இலங்கை இராணுவம் சுட்டுத் தள்ளியக் கொடூரம் – மன்னிக்க முடியாத போர்க்குற்றமாகும்; இது என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.மூலம்[தொகு]