உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத் தேர்தலின் போது புலிகள் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 14, 2011

தமிழ்நாடு மாநிலத்தில் இடம்பெற இருக்கும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் போது மிக முக்கிய அரசியல் பிரமுகர்களை படுகொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் தமிழ்நாட்டுப் பொலிஸாருக்கு எச்சரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பிரதமர், தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர், தமிழக முதல்வர் ஆகியோர் புலிகளின் முக்கிய குறிகளாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் கடந்த டிசம்பரிலேயே முடிந்திருக்கலாம் என்றும் இந்த தாக்குதல் பணிகளை ஒருங்கிணைக்க புலிகளின் நிதிப் பிரிவைச் சேர்ந்த முக்கிய நபர்களும் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த சிலரும் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


இப்போது இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள புலிகள் தந்துள்ள தகவலின்படி சென்னை வளசரவாக்கத்தில் எல்டிடிஈயினர் நீண்ட காலமாகவே தங்கியிருப்பதாகவும், இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு இவர்கள் உதவலாம் என்றும் மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்குத் தகவல் தந்துள்ளது. மேலும் புலிகளின் தற்கொலைப் படையினரில் ஒரு பிரிவினர் நாகர்கோவிலுக்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.


மூலம்

[தொகு]