தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தல் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 5, 2016

தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 19 அன்று வாக்குகள் எண்ணப்படும்.


தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களில் ஏப்ரல் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். மனுக்களை பெற ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 30-ல் நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள மே 2-ம் தேதி கடைசி நாளாகும்.


மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனினும் அங்கு மொத்தம் 7 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்டத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.


வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நோட்டா என்பது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட முறை.


தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 22-ம் தேதி நிறைவடைகிறது. இதேபோல புதுச்சேரி - ஜூன் 2, கேரளா - மே 31, மேற்கு வங்கம்- மே 29, அசாம் - ஜூன் 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முடிகிறது.


மூலம்[தொகு]