தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 24, 2011

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று 4வது முறையாக ஆஜராகி மீதமுள்ள கேள்விகளுக்குப் பதில் அளித்ததுடன் கையெழுத்து போட்டு நீதிமன்ற நடைமுறைகளை முடித்துக்கொண்டுள்ளார்.


1991-1996-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக 1,339 கேள்விகள் தயார் செய்யப்பட்டிருந்தன. கடந்த அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் 571 கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று முன்தினம் மாத்திரம் அவர் 580 கேள்விகளுக்கு பதில் அளித்தார். மீதமுள்ள 192 கேள்விகளுக்கும் நேற்றுப் பதில் அளித்தார்.


முதல்வரிடம் நடந்து வந்த விசாரணை முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த மூவரும் நவம்பர் 29ம் தேதி ஆஜராக நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டுள்ளார். அவர்களிடம் கேட்பதற்கு 142 கேள்விகளை நீதிமன்றம் தயாரித்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]