உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆண்டுக் கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 22, 2010

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை தமிழக அரசு தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.


தனியார் பள்ளிகள் தமது மாணவர்களிடம் இருந்து அறவிடக்கூடிய அதிகபட்சக் கல்விக் கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் குழு கடந்த மே மாதம் நிர்ணயம் செய்தது. இக்கட்டணங்களின் விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.


இதனைத் தொடர்ந்தே இக்கல்விக் கட்டண விவரங்களை மாநில அரசு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இக்கட்டண விவரங்களின் படி, 10,000 முதல் 11,000 ரூபாய் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை அரசுக்குத் தெரிவிக்காத 532 பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் பெற்றிருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மொத்தம் 10,934 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.


கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]