உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியப் பதவிகளுக்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது. இது உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவாகும். இதற்காக 43,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


சென்னையில் மட்டும் 4876 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் வாக்குப் பதிவை காணொளியில் படமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெளி மாநில காவல்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் 66,169 வேட்பாளர்களும், கிராமப்புறத்தில் 3,45,590 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவில் 1.33 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.


உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. தி.மு.க., போன்ற ஒரு சில கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தை துவக்கினர். அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், வேட்புமனு தாக்கலுக்குப் பின் துவக்கினர். காங்கிரஸ் - பா.ம.க., - ம.தி.மு.க. வேட்பாளர்கள், வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியான பின் பிரசாரத்தை ஆரம்பித்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. தலைவர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மற்றும் காங்.தலைவர் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மத்திய அமைச்சர் வாசன் ஆகியோர் முதல் கட்டத்திலேயே பிரசாரத்தை மேற்கொண்டனர். பிரசாரப்பணிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றன.


மூலம்

[தொகு]