தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை வெளியிடுவதற்கு அரசு தடை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 25, 2011

சர்ச்சைக்குரிய டேம் 999 என்ற ஆங்கிலத் திரைப்படத்தை [[w:தமிழ்நாடு|தமிழ்நாட்டில்] திரையிடுவதற்குத் தமிழக அரசு நேற்றுத் தடை விதித்தது. அந்தத் திரைப்படம், மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக மற்றும் கேரள மக்களிடையே இணக்கப்பாட்டைக் குலைத்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், அதை தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அந்த அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணையை நேரடியாகக் காண்பிக்கா விட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள், முல்லைப் பெரியாறு அணையை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும், படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைப் பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி, முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி தமிழக-கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதாகவும் எனவே, "டேம் 999' படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணைக்கட்டு உடைந்து இலட்சக்கணக்கான மக்கள் மரணமடைவது போல தயாரிக்கப்பட்டுள்ள டேம் 999 ஆங்கிலப்படம் இந்தியாவில் இன்று வெளியாகிறது. வெளிநாட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் சோகன் ராய் மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே இது போன்று சர்ச்சைக்குரிய படத்தை எடுத்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும் தெரிவித்திருந்தனர்.


'அந்தப் படம் தமிழகத்துக்கு எதிரானது என தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் தடைவிதிக்காத பட்சத்தில், மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டால் ஒரு வாரத்துக்குள் அந்தப் படத்துக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பதைத் தெரிந்துகொள்வார்கள்,’ என்றும் இயக்குநர் ஷோகன் ராய் தெரிவித்துள்ளார்.


டேம் 999 திரைப்படம் முப்பரிமாணத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியக் கூட்டுத்தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. அஷிஷ் வித்யார்த்தி, விமலா ராமன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அமீரகத்தில் இத்திரைப்படம் நேற்று திரையிடப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]