தமிழ்நாட்டில் விரைவில் இலத்திரனியல் மாவட்டத் திட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 6, 2010

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இலத்திரனியல் மாவட்டத் திட்டம் (e-district project) அடுத்த இரு மாதங்களில் அமைக்கப்படவிருப்பதாக தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆற்றல் துறைச் செயலர் பி.டபிள்யூ.சி. தாவிதார் தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமையன்று கோயம்புத்தூரில் "கணெக்ட் கோயம்புத்தூர்" என்ற மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே திரு. தாவிதார் இதனைத் தெரிவித்தார். இந்தியத் தொழிற்துறையின் கூட்டமைப்பு இம்மாநாட்டை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்தத் திட்டத்தின் முதலாவது கட்டத்துக்காத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுள் கோயம்புத்தூரும் ஒன்று.


கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஓசுர், சேலம், மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அரசு அமைக்கவிருக்கிறது.


அத்துடன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கென கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி ஒன்றை தமிழ்நாடு அரசு அடுத்த வாரம் அறிவிக்கவிருப்பதாக இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெறும், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அனனத்தும் விக்கிப்பீடியாவில் பதியப்படும். தற்போது கிட்டத்தட்ட 22,000 கட்டுரைகளைக் கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில், இக்கட்டுரைப் போட்டியை அடுத்து கட்டுரைகளின் எண்ணிக்கையை மேலும் 30,000 ஆல் அதிகரிக்கலாம் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.


"தொழில்நுட்பம் தொடர்பான சகல துறைகளும் அடங்கலாக, தகவல் தொழில்நுட்பப் பகுதி வளர்ச்சியுற்று வருகிறது," என இன்போசிஸ் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


இவ்வாண்டில் இதன் வளர்ச்சி 13 முதல் 15 விழுக்காடு வரை இருக்கும் எனவும், மூன்று இலட்சம் பேர் இதனால் வேலை வாய்ப்புப் பெறுவர் என நாஸ்காம் தரவுகள் தெரிவிக்கின்றன.

மூலம்