உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான தமிழ் மென்பொருள் மதிப்பீட்டுப் பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 13, 2015

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன தேசிய மதிப்பீட்டு மையம், மைசூரும் இணைந்து தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான 'தமிழ் மென்பொருள் மதிப்பீடு' என்னும் பயிலரங்கத்தினை சென்னை, எழும்பூரிலுள்ள ஆல்சு சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இந்நிகழ்வு 13,14.02.2015 ஆகிய இருநாட்களில் நிகழ்த்தவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர். கா.மு.சேகர் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இஆப., தலைமையுரை நிகழ்த்தவுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நூலை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன், தேசிய மதிப்பீட்டு மையத்தின் தலைவர் முனைவர் மு.பாலகுமார், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கணினித் தரவக மையத்தின் தலைவர் முனைவர் லி. இராமமூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். பயிலரங்க விளக்கவுரையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வழங்க உள்ளார். உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன் நன்றியுரை வழங்க உள்ளார்.

13.02. 2015 அன்று நிகழவுள்ள சிறப்பு பயிலரங்க அமர்வுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் மேனாள் பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் சொற் திருத்தி குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் வெ.கிருட்டிணமூர்த்தி ‘தமிழ்ச் சொல் திருத்தி ஒப்பீடு’ குறித்தும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் இரவிசங்கர் ‘ஒலியியல் தட்டச்சு உள்ளீட்டு முறை’ குறித்தும், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உதவிப் பேராசிரியர், முனைவர் தனலெட்சுமி, “கணினி வழி தமிழ்ச்சொல் இலக்கண மென்பொருள் மதிப்பீடு” குறித்தும், தேசிய தகவலியல் மையத்தைச் சார்ந்த முனைவர் இனிய நேரு “தமிழக அரசின் மின்ஆளுகை முயற்சிகள்” குறித்தும், முனைவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கி.உமாதேவி “சந்தி திருத்தி” குறித்தும், முனைவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் த.மாலா ‘இயற்கை மொழி - பகுப்பாய்வு’ குறித்தும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சார்ந்த பேரா. ந. நடராசபிள்ளை “கணினித் தொழில்நுட்பம் - பல்லூடகம் தயாரித்தலும் மதிப்பிடுதலும்’’என்னும் பொருண்மை குறித்தும் பயிலரங்க உரை நிகழ்த்த உள்ளார்கள்.

14.02. 2015 அன்று நிகழவுள்ள சிறப்பு பயிலரங்க அமர்வுகளில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் மா.கணேசன் “விசைப்பலகை வடிவமைப்புகளும் தட்டச்சு முறைகளும்” என்னும் பொருண்மையிலும், சிங்கப்பூரைச் சார்ந்த உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மேனாள் இயக்குநர் ச.மணியம், “பன்னாட்டு இணைய முகவரி” என்னும் பொருண்மையிலும், பெரியார் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் துணைப் பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, “தமிழ்க் கணிமையும் தொடர்பாடலும்” என்னும் பொருண்மையிலும், அமிர்தா பல்கலைக் கழகம், கோயம்புத்தூரைச் சார்ந்த முனைவர் மா.ஆனந்த குமார் “இயந்திர மொழிபெயர்ப்பும் தமிழ் மொழியியல் கருவிகளும்” என்னும் பொருண்மையிலும், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சார்ந்த பேரா.சாம்மோகன்லால், “கணினி வழியாக ஆட்சிச் சொற்கள் மொழிபெயர்ப்பும் உருவாக்கமும்” என்ற பொருண்மையிலும், தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் க.சிபி ‘‘கணினித் தமிழ்” என்ற பொருண்மையிலும், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த துணைப் பேராசிரியர் முனைவர் இல.சுந்தரம் “தமிழ் மின் நூல்கள்” என்னும் பொருண்மையிலும், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கணினித் தரவக மையத்தின் தலைவர் முனைவர் லி.இராமமூர்த்தி “மென்பொருள் தயாரிப்பதில் தரவுத்தொகுப்பு” என்னும் பொருண்மையிலும் பயிலரங்க உரை நிகழ்த்த உள்ளார்கள்.